புதிதான மீன்களை வாங்க வேண்டாம்.
புதிதான ஃபிரஷ் என்று கேட்பார்களே அந்த மீன்களை வாங்கவே வேண்டாம். குறைந்தபட்சம் அரைநாளாவது அந்த மீன்கள் ஐஸில் வைத்திருக்க வேண்டும். அதையே வாங்கி சமைத்து உண்பது சாலச்சிறந்தது./
நூறு வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகரில் ஐஸ் வைத்த மீன்கள் கிடைப்பது அரிது.காரணம் அப்போதெல்லாம் ஐஸ் என்ற பொருளே கிடையாது. ஒன்று மீன்களை புதிதாக உண்ண வேண்டும், அல்லது மீன் சுவையே என்னவென்று அறியாமல் இருக்க வேண்டும். நான் சொல்வது கடல் மீன்களை மட்டுமே, மற்றபடி ஆறு குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை அல்ல./
பிற்பாடு சென்னை நகரத்திற்கு ஐஸ் அறிமுகமாகி குளிர்பதன வசதிகள் எல்லாம் வந்துவிட்ட நிலையில், ஸ்டார் ஓட்டல்களில் மூன்று மாதத்திற்கு மேலாக குளிர்சாதனத்தில் வைத்த மீன்களை உங்களுக்கு சமையல் செய்து பரிமாறும் வழக்கம் வந்து விட்டது. ஐய்யோ! மூன்று மாதத்திற்கு மேலாகவா! என்று நீங்கள் மூச்சை இறுகப்பிடிப்பதை உணர்கின்றேன்! அது ஸ்டார் ஓட்டல்களில் மட்டுந்தான்!/
சுமார் முப்பதைந்து வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் இருக்கும் என் வீட்டில் தினந்தோறும் மீன் சமைப்பார்கள். அப்போதெல்லாம் வீடே மீன் மணத்தில் நாறும். சமைப்பதற்கு முன்பாக அதை கல் உப்பிட்டு தேய்த்து கழுவுவார்கள். ஆனாலும் சமைத்து உண்ணும்போதே மீன் மணம் தெரு முழுவதும் அடிக்கும். சிலநாட்களில் உணவை உண்ட பின்னரும், எதை தொட்டாலும், “கவுச்சி”, மணம் அடிக்கும். அப்போதெல்லாம் வீட்டை கழுவி தள்ளுவார்கள்/
கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் கதையே வேறாகும். அவர்களுக்கு புதிதான மீன்கள் மட்டுமே அதிக சுவை கொடுக்கும் நல்ல மணம் தரும். உதாரணமாக காசிமேடு மீனவர் ஒருவரின் வீட்டில் நான் சாப்பிட்ட சங்கரா மீனை கூறலாம். அது அப்போதுதான் பிடிக்கப்பட்டு குழம்பும் வைக்கப்பட்டது. ஆனால் எப்போதுமே மிக மென்மைதன்மையுடன் இருக்கும் சங்கரா மீன் அன்றுமட்டும் என் நாக்குக்கு மிகவும் கடினத்தன்மையுடன் இருந்தது புலப்பட்டது./
பிற்பாடு என் வாடிக்கையாளர் ஒருவர் வஞ்சிரம் என்கின்ற மெளலாசி மீனை சமைத்து உண்டபின் வீட்டையே கழுவி தள்ளியிருக்கிறார். ஐய்யோ மீன் ஆசையே போய்விட்டது என்று அவர் அன்று முழுவதும் புலம்பி தள்ளினார்/
இதிலிருந்து நான் புரிந்துகொண்டது என்னவெனில்,குறைந்தபட்சம் அரைநாளாவது ஐஸ் வைத்த மீன்களே நமக்கு நன்றாக இருக்கும். புதிதான மீன்களை குறிப்பாக வஞ்சிரத்தை வாங்கினால், பிற்பாடு நீங்கள் வீட்டை கழுவித்தள்ளி, ஊதுவத்தி ஏற்ற வேண்டி வரும். அதுவுமின்றி மீன் கடினமாக இருக்கும். அத்தோடு
வறுத்தால் சதையானது அப்பளம் போல் முறுக்கிக் கொள்ளும்/
எனவே புதிதான மீன்களை வாங்க வேண்டாம்./
Comments
Post a Comment